19.5.06

தமிழருக்கெதிரான கூட்டு சதி

தமிழக மீனவர்கள் 100 பேரும் அவர்களுடைய மீன்பிடி படகுகளும், மீன்படி வலைகளும் இலங்கை மீனவர்களால் கடத்தப்பட்டன. இது தமிழகத்தில் வெளியான செய்தி. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறல். இது இலங்கையில் வெளியான செய்தி. நடந்த சம்பவம் ஒன்று, ஆனால் செய்திகளோ இரண்டு. தமிழர்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேடிக்கொள்ள பலரும் முன்வருவதை இந்நிகழ்வு தெளிவுபடுத்துகின்றது. இச்சம்பவங்கள் நடந்த போது இலங்கை, மன்னார் மாவட்டத்தில் பேசாலையில் நிகழ்வு ஒன்றில் நான் கலந்து கொண்டதால் நேரடியான செய்திகளை, உண்மையை முன் வைக்கும் பொறுப்பினை இந்திய தமிழன் என்ற முறையில் ஏற்று முன்வருகிறேன்.

2003, மே மாதம் 3ம் தேதி மதியம் இலங்கை, மன்னார் மாவட்டம், பேசாலை என்ற மீனவ கிராமத்தில் இந்திய படகுகள் வருவதை கண்ணுற்ற மக்கள், இந்திய படகுகளை எல்லைக்கு அப்பால் துரத்தவே சென்றனர். இந்திய மீனவர்கள் இலங்கை எல்லையில் அத்துமீறி நுழைந்து, தங்கள் படகுகளையும், மீன்பிடி வலைகளையும் சேதப்படுத்துவதாகவும், தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி சிறிய மீன்களையும் அடியோடு பிடித்து செல்வதால் தங்களின் மீன்வளம் குன்றுவதாகவும் இலங்கை மீனவர்கள் தெரிவிக்கின்றார்கள். இந்திய கடற்பரப்பில் மீன்வளம் குன்றியதாலேயே இப்போது இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கின்றார்கள் என்று பேசாலை மீனவர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். இரவு நேரங்களில் இந்திய படகுகள் நூற்றுக்கணக்கில் வருவதாகவும், அந்த படகுகளில் எரியும் விளக்குகள் ஒரு கிராமமே கடலில் மிதப்பது போன்று தோன்றுவதாகவும் அதனை நேரடியாக பார்த்த அருட்தந்தையர்கள் கூறுகின்றார்கள்.

3ம் தேதி மாலையில் இந்துமாக்கடலில் இலங்கை தமிழ் மீனவர்களுக்கும் இந்திய தமிழ் மீனவர்களுக்கும் ஏற்பட்ட கைகலப்பில் 17 தமிழ்நாட்டு மீனவர்களும், 4 பேசாலை மீனவர்களும் காயமுற்றனர். 70க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கை மீனவர்கள் உதவியுடன் இலங்கை காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். அடுத்த நாள் தலைமன்னாரில் 42 தமிழக மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டார்கள். 4ம் தேதி பகலில் பேசாலை கிராமத்தில் விசாரணை செய்ய வந்த இலங்கை காவலர்கள் நடைபெற்ற சம்பவத்திற்காக அப்பாவி இளைஞர்கள் நான்கு பேரை கைது செய்து, இந்திய படகுகளை சேதப்படுத்தியதாகவும், மீன்பிடி கருவிகளை கொள்ளளையடித்தாகவும் பொய் வழக்கு போடப்பட்டு அழைத்துச்சென்றனர். பேசாலை கிராம மக்களின் ஒற்றுமையாலும், உடனடி சாலை மறியல் போன்ற போராட்டத்தினாலும், மன்னார் ஆயர், பங்குதந்தையர்களின் முயற்சியாலும் அந்த அப்பாவி இளைஞர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இந்திய மீனவர்;களை நேரில் சந்தித்து விசாரித்த போது அவர்கள் அனைவரும் இராமேஸ்வரம் பகுதிகளை சார்ந்தவர்கள் என்பதும், கூலிக்காக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்கள். கச்சத்தீவு பகுதிகளில் தங்களை இலங்கை மீனவர்கள் சுற்றி வளைத்து பிடித்ததாகவும், இரும்பு தடிகளால் தங்களை அடித்து, காயப்படுத்தியதாகவும், மயக்க நிலையில் தங்களை கடத்தி வந்ததாகவும் கூறினார்கள். கடந்த காலங்களில் பல முறை இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்ததாகவும், இந்திய, இலங்கை அரசுகள் எவ்வித தடுக்கும் முயற்சிகளை எடுக்காமலும்; இருப்பதாகவும் கூறினார்கள்.

மேலும் நடந்த சம்பவங்கள்தான் என் மனதைத் தொட்டு, உண்மையை வெளி கொணர்கிறது. சிறைபிடிக்கப்பட்ட எல்லா இந்திய மீனவர்களையும் பத்திரமாக கொண்டு வந்து, தாங்களாகவே அவர்களுக்கு உணவு சமைத்துத் தந்தார்கள் இலங்கை மீனவர்கள.; இந்திய படகுகளைத் தாங்களே கரைக்கு ஓட்டிவந்து அவைகளைப் பாதுகாப்பாக இலங்கை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்கள். மருத்துவமமையில் சிகிச்சை பெற்றுவரும் இந்திய மீனவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, புதிய லுங்கிகளை வாங்கி கொடுத்து, ரொட்டி, பிஸ்கட் போன்ற உணவு பொருட்களையும் தொடர்ந்து கொடுத்து கொண்டு வந்தார்;கள். கடந்த இருபது ஆண்டுகளாக இலங்கை தமிழர்கள் அகதிகளாக இந்தியா வந்தபோது தமிழக மீனவர்கள்தான் தங்களை அன்புடன் வரவேற்று, உணவளித்து, உபசரித்து, பாதுகாப்பளித்ததை இன்று இலங்கை தமிழர்கள் நன்றி உணர்வுடன் நினைத்து உதவி செய்கின்றார்கள். இந்திய மீனவர்களும் தங்களைப் போலவே கூலி தொழிலாளர்கள்தான், அவர்களையும் நம்பி இந்திய கடற்கரையில் நூற்றுக்கணக்கான குடும்பங்;கள் இருப்பதையும் இலங்கை மீனவர்கள் உணர்ந்து இந்திய படகுகளை சேதப்படுத்தாமல் பத்திரமாக காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

உண்மையில் நடப்பது என்;ன? முதலாவதாக, இந்திய மீனவ முதலாளிகள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு உரிமம் பெற்று கூலிதொழிலாளர்களை அமர்த்தி அவர்களை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுப்புகிறார்கள். பிடிக்கப்படும் மீன் அளவுக்கு ஏற்;பதான் அவர்களுக்கு கூலியும் வழங்கப்படுகின்றது. இலங்கை கடற்பரப்பில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் தமிழக அரசியல்வாதிகளைக் கொண்டு நிலமையைச் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையும் இந்த முதலாளிகளுக்கு உண்டு.

இரண்டாவதாக, இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் இலங்கை, இந்திய கடற்படையினர் கண்டுகொள்ளாமல் அசட்டைதனமாக இருப்பதுவே வேதனைக்குரியது. இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறினார்களா அல்லது இலங்கை தமிழ் மீனவர்கள் இந்திய தமிழ் மீனவர்களையும், படகுகளையும் கடத்தினார்களா? என்ற உண்மை நிலை விசாரிக்கப்பட வேண்டியதொன்றாக இருந்தாலும் இந்திய, இலங்கை கடலோர காவல்படையின் செயல்பாடுகள் கேள்விக்குட்படுகின்றன.

இந்திய கடற்பரப்பிலும், அதற்கு அப்பால் சர்வதேச எல்லைகளிலும், ஒரு சிறிய துரும்பு மிதந்தாலும் அவற்றை கண்டுபிடித்து தாக்கும் ஆற்றல் வாய்ந்த இந்திய கடற்படை பல மணிநேரமாக இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் நடந்த சண்டையை பராமுகமாக இருந்தது ஏன்? நாட்டையும், நாட்டுமக்களையும் காப்பாற்ற வேண்டிய இந்திய, இலங்கை கடலோர காவற்படைகள் தனது மீனவர்கள் தாக்கப்படுவதை ஏன் கண்டு கொள்ளவில்லை? இலங்கை தமிழர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தும் இந்திய அரசும், இராணுவமும் தமிழக மீனவர்கள் 120 பேரும் 25 படகுகளும் இலங்கை மீனவர்களால் கடத்தப்பட்ட போது நடவடிக்கை எடுக்க தவறியது ஏன்?

இந்திய கடற்படை போலவே இலங்கை கடற்படையும் தமிழ் மீனவர்களின் பிரச்சனையில் அக்கறையில்லாதது போல் நடந்துகொள்கிறது. இந்தியாவிலிருந்து மீனவர்களும், படகுகளும் கடத்தப்படுவதைத் தடுக்கக்கூட வக்கில்லாத இலங்கை இராணுவம் அப்பாவித் தமிழர்களை விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்துவதைத்தான் காலம்காலமாக செய்து வந்துள்ளது. யார் யாரை தாக்கினார்கள் என்ற புகார் ஏதும் இல்லாமல் 1500 மீனவ குடும்பங்கள் உள்ள பேசாலை கிராமத்தில் நால்வரை மட்டும் தேர்ந்தெடுத்து கைது செய்தது அடிப்படை மனித உரிமை மீறலாகும். கைது என்ற பெயரில் நடவடிக்கை எடுப்பதாக சர்வதேச நாடுகள் முன் நல்ல முகத்தை காட்டிக் கொள்ளவே இலங்கை அரசு விரும்புகிறது.

இந்திய தமிழர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் பகைமையை உண்டாக்கி, ஒருவரையொருவர் தாக்கி அழித்து கொள்வதையே இரண்டு நாட்டு அரசுகளும் விரும்புகின்றன. தமிழர்களின் சகோதரத்துவ உணர்வை மழுங்கடிக்கச் செய்து இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் பாலம் அமைப்பதினால் என்ன பயன்? யாருக்கு பலன்? தமிழர்களுக்கெதிரான கூட்டு சதியை தமிழர்கள் உணர்ந்து செயல்படவேண்டும். ஒருவர் மற்றவரின் அடிப்படை வாழ்வாதார, மனித உரிமைகளை மதிக்க வேண்டும். உறவுப் பாலங்களைக் கட்டியெழுப்புவோம்.

மாவீரர் துயிலும் இல்லங்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் மனநோயாளர்கள், போதை மருந்துக்கு அடிமையாகி தீவிரவாதத்தில் ஈடுபடுகிறார்கள்; என்றெல்லாம் சில வருடங்களுக்கு முன்பு இந்திய பத்திரிகையில் செய்தி வெளியானது. இத்தகைய புனைக்கதைகளை எழுதியவர்களுக்கும், அதை நம்பினவர்களுக்கும் இதோ ஓர் செய்தி.

ஆயிரங்கணக்கான தமிழ் இளையோரை பலி கண்ட கோரப் போர். படிக்க வேண்டிய வயதில், இளமை சுகங்களை அனுபவிக்க வேண்டிய பருவத்தில் மண்ணுக்காய், மக்களுக்காய் இன்னுயிரை நீத்த மாவீரர்களை, தேச தியாகிகளை விடுதலைப் புலிகள் இயக்கம் தக்க மரியாதையோடு வணக்கம் செலுத்தும் இடங்களே, மாவீரர் துயிலும் இல்லங்கள். கிறித்தவ கல்லறைகளைப் போன்று, போரில் வீரச்சாவு எய்திய வீரர்களை அடக்கம் செய்து, வருடந்தோறும் முதல் களப்பலியான போராளி சங்கர் இறந்த நவம்பர் 27ம் நாளை மாவீரர் தினமாக தமிழீழ தேசமெங்கும் கொண்டாடி வருகின்றனர். மாவீரர்களின் தியாகத்தை உணர்த்தும் வகையில் அவர்களுடைய கல்லறைகளில் ஈகஜோதி ஏற்றப்படுகிறது.

வன்னிக் காட்டில் விசுவமடுவிலும், முள்ளியவிளையிலும் யாழ்குடா நாட்டில் கோப்பாயிலும், மன்னார் மாவட்டத்தில் பண்டிவிரிச்சான், முளங்காவில், மற்றும் ஆண்டான்குளத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை நேரில் கண்டேன். மிக அழகான கல்லறைத் தோட்டங்கள். வரிசையாக ஒரே மாதிரியான கல்லறைகள். சுற்றிலும் அழகான மலர்த் தோட்டங்கள். அருமையான பாராமரிப்பு. எந்த நாட்டிலும், நாட்டிற்காக இறந்த வீரர்களுக்கு செய்யப்படாத மரியாதை தமிழீழத்தில் மட்டுமே செய்யப்படுகிறது. வீரச்சாவு எய்திய மாவீரர்களின் தியாகம், அர்ப்பணிப்பு, ஈகை, போர்களத்தில் பட்ட துன்பங்கள், எல்லா வற்றுக்கும் மேலாக அவர்களுடைய இலட்சியம் மறக்கப்படாமல் தலைமுறைக்கும் நினைவுகூறப்படும். இறப்பினும் நாம் வாழ்வோம் என்ற எண்ணமே இளையோரை போராட்ட வாழ்விற்கு அழைக்கிறது. தனது பிள்ளை மாவீரன் என்பதை சில பெற்றோர் மனமுவந்து பெருமையோடு என்னிடம் கூறியுள்ளனர். முள்ளிக்குளத்தை பிறப்பிடமாக கொண்ட அந்தோனி என்ற இளைஞன் முருங்கன் பாடசாலையில் பனிரெண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்தபோதே இயக்கத்தில் இணைந்து 2001ம் ஆண்டு முகமாலையில் நடைபெற்ற சமரில் வீரச்சாவு எய்தியுள்ளான். செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி அவருக்காக இரண்டாமாண்டு நினைவு திருப்பலியை நான் முள்ளிக்குளத்தில் நிறைவேற்றிய போது அவரின் தியாகத்தை நினைத்து என்னையறியாமலே அழுதுவிட்டேன்.

இந்த மாவீரர்களின் துயிலும் இல்லங்களின் விடுதலை தாக்கத்தை சரியாக உணர்ந்து கொண்ட சிங்கள இராணுவம் யாழ்குடா நாட்டை 2000ம் ஆண்டில் கைப்பற்றிய போது கோப்பாயில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்கினர். இன்று மீண்டும் முன்னதைவிட அழகான தோற்றத்தை அது பெற்று மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துகிறது.

19.4.06

இந்தியாவின் இன்றைய நிலை

உலகநாடுகளின் பிரதிநிதிகள் அதிலும் குறிப்பாக ஜப்பானின் விசேட தூதுவர் மற்றும் இங்கிலாந்தின் வெளியுறவு இணையமைச்சர் போன்றோர் தமிழீழத்தில் விடுதலைப் புலிகளோடு நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, நிதியுதவிகளை தாராளமாகச் செய்ய வாக்குறுதி கொடுத்த நேரத்தில் இந்தியாவின் நிலை தர்ம சங்கடத்திற்குள்ளானது. நோர்வே, ஒஸ்லோவில் நடைபெற்ற நிதியுதவி செய்வோர்கள் மாநாட்டில், புலிகள் கலந்து கொள்ளும் எந்தவொரு கூட்டத்திலும் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கியுள்ள நேரத்தில் இந்தியா இலங்கையின் சமாதான முயற்சியில் ஒதுங்கியிருப்பது நல்லதல்ல என்று உணர்ந்துள்ளனர். ஆகவேதான் இலங்கையின் வடக்கு- கிழக்கு பகுதியில் போரினால் சேதமுற்ற பௌத்த விகாரைகளை சீர்படுத்த இந்தியா உதவும் என்ற செய்தியானது வெளியிடப்பட்டது. இந்தியாவில் சிறுபான்மையினரின் பாதுகாவலனாக பிதற்றிக் கொள்ளும் பா.ஜ.க. வடஇலங்கையில் சிறுபான்மையுள்ள பௌத்த மதத்தினருக்கு கை கொடுக்க விரைந்துள்ளது.

இந்துத்துவா கொள்கையின் அடிப்படையில் இந்து மதத்தைக் காப்பாற்றவும், உலக இந்துக்களை ஒன்று சேர்க்கவும் முயற்சிக்கும் பா.ஜ.க., வட இலங்கையில் ஆயிரங்கணக்கான இந்து தமிழர்கள் கொல்லப்பட்ட போது வாய் பொத்தி மௌனம் காத்தது ஏன்? பல இந்து கோயில்கள் இலங்கையில் தரைமட்டமான போதும், பௌத்த விகாரையாக மாறின போதும் பேசாமல், ஆதிக்க சக்திகளின் பக்கம் சாய்ந்தது ஏன்? தமிழர்களின் தாயகமான தமிழீழத்தில் அழிந்து போன பாரம்பரிய இந்து கோயில்களையும், இந்து தமிழர்களின் மறுவாழ்வையும் விட வந்தேறிகளின் பௌத்த விகாரைகளை சீர்படுத்த சிங்கள பேரினவாத அரசுக்கு நிதியுதவி செய்வதுதான் இந்தியாவின் இன்றைய தலையாயக் கடமையா?
ஆதிக்க சக்திகளோடு கை கோர்த்துக் கொள்வதுதான் பார்ப்பனிய தத்துவம். தாழ்த்தப்பட்ட இந்து மத தலித் சகோதரர்கள் இதை உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும். நாம் இந்துக்கள் என்று சமத்துவம் கொண்டாடினாலும், பார்ப்பனிய தலைமைத்துவம் நம்மை அடிமைப்படுத்தும்.

அண்டை நாடுகளின் உறவு

கடந்த இருபது ஆண்டுகால தமிழீழ விடுதலை போராட்டத்தில், உலக நாடுகள் தங்களையே சிங்கள பேரினவாத ஆதிக்க சக்திக்கு அடிமையாக்கி கொண்டனர். தென்னாப்பிரிக்க விடுதலையை ஆதரித்த உலக நாடுகள், பாலஸ்தீன விடுதலையை ஆதரித்தவர்கள், கொசாவோ இன விடுதலையை கை கொடுத்து மீட்டவர்கள் இலங்கையில் தமிழரின் விடுதலை போராட்டத்தை மட்டும் தீவிரவாதம் என்றனர். பிரிவினைவாதம் என்று முத்திரைக் குத்தினர். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

• மேற்கத்திய நாடுகள், தென்கிழக்கு ஆசியாவில் செல்வாக்கு பெற அந்தந்த நாடுகளின் அரசியல் தலைமையை ஒருபோதும் பகைத்ததில்லை.
• தெற்காசியாவில் வல்லரசு நாடாக திகழும் இந்தியாவின் எந்தவொரு நிலைப்பாட்டிற்கும் எதிராக உலக நாடுகள் எப்போதும் நின்றதில்லை. எந்த நாட்டில் யார் ஆட்சி செய்தாலும் இதே நிலைதான்.

ஆனால் இன்று உலக நாடுகள் அனைத்தும் இலங்கைவாழ் தமிழர்களின் ஒரே பிரதிநிதி ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ தான் என்பதை ஏற்றுக் கொண்டு (பின்வரும் பக்கங்களில் இதை விரிவாக ஆராய்வோம்), அவர்களோடு கை குலுக்கி நிற்கின்றனர். கடந்த ஜனவரி மாதம் மட்டும் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் வன்னிக்கு விஜயம் மேற்கொண்டு புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 2003 ஜனவரி 21ம் தேதி அன்று மட்டும் அமெரிக்காவின் வேர்ல்ட் விஷன்;, ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள், டேனிஷ் அகதிகள் பேரவை பிரதிநிதிகள் மற்றும் ஜப்பான், ஐ.நா.சபை அதிகாரிகள் தமிழீழ தாயகத்தில் வன்னி பிரதேசம் கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் திரு. சு.ப. தமிழ் செல்வன் அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். (ஆதாரம்: ஈழநாதம், 22-01-2003) ஐ.நா. சபையின் செயலர் திரு. கோபி அன்னான் விரைவில் தமிழீழத்திற்கு விஜயம் செய்வார் என்று பத்திரிகை செய்தி வெளியாகியிருந்தது. யூலை மாதம் A9 பாதையூடாக புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இலங்கைக்கான கனேடிய தூதர், அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் ஜப்பான், நோர்வே தூதர்கள் பயணமானார்கள். ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் அரபு நாடுகளின் அபிவிருத்தி வங்கி போன்றவை நேரடியாக தமிழீழத்தில் மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டுள்ளனர். உலக நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கமாக தடை செய்யப்பட்டதாக இருப்பினும், இலங்கையில் தடை நீக்கப்பட்டு தமிழர் பகுதிகளில் மட்டுமல்ல தலைநகர் கொழும்புவிலும் அரசியல் அலுவலகங்களை விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியுள்ளனர்.

“விடியல் அவசியமென்பதால் அவர்கள்
சூரியனையும் நகர்த்துவார்கள்.
வாழ்வது சாத்தியமென்றால் அவர்கள்
பூமியையும் புரட்டுவார்கள்”

ப்ரவீன் என்பவர் எழுதியதாக எங்கோ நான் வாசித்தேன் உண்மைதான் தமிழன் வாழ்வது சாத்தியமென்றால் உலக நாடுகளெல்லாம் தமிழீழம் நோக்கி வர பூமியையும் புரட்டுவார்கள். அதுதான் இன்று, இங்கு நடந்து கொண்டிருக்கின்றது.

மிதிவெடி அபாயம்

வவுனியா தொடக்கம் யாழ்பாணம் செல்லும் 193 கிலோமீட்டர் தூரம் முழுவதும் வீதியின் இருபுறமும் கண்ணிவெடி அபாயச் செய்தி காணப்படலாம். இந்த வீதிதான் தமிழீழ போராட்ட வரலாற்றில் உலக பிரசித்தி பெற்ற ‘ஆல்பா9’ (A9) கொழும்பு - கண்டி வீதி. இலங்கை இராணுவமும் விடுதலை புலிகளும் கண்ணி வெடிகளை அதிகமாக பாவித்துள்ளனர். உலகில் எங்கெல்லாம் யுத்தம் நடந்துள்ளதோ அங்கெல்லாம் கண்ணி வெடிகளால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கண்களுக்கு புலப்படாதவாறு நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள இவ்வகை வெடிகள் மனிதர்களையும், மிருகங்களையும் வெகுவாக பாதித்து ஊனமடையச் செய்துள்ளது. இலங்கையின் வடக்கு - கிழக்கு தமிழர் பகுதிகளில் மட்டும் சுமார் 20 இலட்சம் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும், அவைகளில் இதுவரை ஒரு இலட்சம் மட்டுமே மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும், மனிதநேய கண்ணிவெடி அகற்றும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தாங்களாகவே சொந்தமாக கண்ணி வெடிகளை தயாரித்துள்ளனர். அவை பெரும்பாலும் மரத்தினால் செய்யப்பட்டதாகவும், மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் அமைந்துள்ளன. அதே நேரத்தில் அவை காலத்தால் விரைவில் அழியக்கூடியதாகவும் உள்ளது. சிங்கள இராணுவம் இஸ்ராயேல், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிலிருந்து மிதிவெடிகளை இறக்குமதி செய்துள்ளது. இவை பிளாஸ்டிக் பொருட்களால் செய்யப்பட்டுள்ளதால் பல வருடங்களுக்கும் அழியாமல் நிலத்தில் உள்ளது. கண்ணி வெடிகளுக்கு நண்பன் யார், எதிரி யார் என்று அடையாளம் தெரியாது. மனிதருக்கும் மிருகங்களுக்கும் கூட வித்தியாசம் தெரியாத இவ்வகை மிதிவெடிகள் இன்றும் பொது மக்களுக்கு மிகப்பெரும் அபாயமாகத்தான் உள்ளது.

சிறுவனின் பெயர் விமல். நண்பர்கள் கூப்பிடும் பெயர் மைன்ஸ் (mines). படிப்பு ஏழாம் ஆண்டு. 1998ம் ஆண்டு மன்னார் மாவட்டம் சிலாவத்துறையில் அகதியாக வாழ்ந்த நேரம் வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த போது இரும்பு பொருள் ஒன்றைக் கண்டிருக்கின்றான். அது ஏதோ விளையாடும் பொருள் என்று கண்nடுத்தவன் அதை விளையாட்டாக தரையில் எறிந்த போது ஏற்பட்ட விபரிதம் தான், “அய்யோ அம்மா” என்று தூக்கி எறியப்பட்டான். பாரிய வெடிச்சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்த பெரியவர்கள் கூடி வந்து பார்த்த போது விமல் காலில் மூன்று பெரிய காயங்கள் ஏற்பட்டு இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது.
அவன் விளையாட்டாக எறிந்த பொருள் ஒரு மிதி வெடி. சிலாவத்துறையில் இலங்கை இராணுவம் முகாம் அமைந்து இருந்த நேரத்தில் பாதுகாப்புக்காக தங்கள் முகாம் சுற்றி வேலி போல் மிதிவெடிகளை புதைத்து வைத்து விட்டனர். முகாம்களை அகற்றிய போது கண்ணிவெடிகளை முழுவதுமாக அகற்றவில்லை. தமிழர் பகுதிதானே என்று அலட்சியம் செய்ததன் விளைவு இந்த விபத்து. இது போன்று எத்தனையோ பேர் கால்களை இழந்து அங்கவீனர்களாகவும், உயிரை இழந்தும் அழிந்தும் போயுள்ளனர். பி.பி.சி வானொலியின் தகவலின்படி மிதிவெடியினால் பாதிக்கப்பட்டவர்களில் 78 சதவீதமானோர் சிறார்கள் என்று ஐரோப்பிய மிதிவெடி அகற்றும் நிபுணர் குழு கருத்து கணிப்பு செய்துள்ளது. இவ்வாறாக எமது எதிர்கால தலைமுறையினரை ஊனமாக்கியுள்ளனர் பகைவர்கள். எமக்கு உடல் ஊனம் ஊனமேயில்லை.

7.4.06

'தாய் மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை

'தாய் மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை!,
தாய் மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை! என்பது மூத்தோர் வாக்கு தமிழர்களே! ஏனெனில், மொழி என்பது ஒரு வார்த்தை மட்டுமே இல்லை, அதுதான் நம் வாழ்க்கை 'அறம்செய்ய விரும்பு என்று வாழ்வைச் சொல்லித் தருவது மொழி அகரத்தைக்கூட இப்படி அறமாகச் சொல்லிப் போதிப்பது நம் பண்பாடு!
தமிழின் மேன்மைதான் தமிழரின் மேன்மை தமிழின் அழிவு என்பது தமிழரின் அழிவு!
சாதியோடு யாரும் வாழ வேண்டாம், மதம் இல்லாமலும் வாழலாம் ஆனால், ஒரு மொழி இல்லாமல் யாரும் வாழ முடியாது. கருவி என்பது புறவயமானது மொழி என்பதோ அகவயமானது கணினிஎன்ற கருவி இல்லாமல் என்னால் வாழ்ந்துவிட முடியும் ஆனால், எப்படி நான் சிந்திக்காமல் இருக்க முடியும்? ஏனெனில் மொழி என்பது மூளையோடு பின்னிப் பிணைந்தது
'தாய் மொழி படி! என்று சொன்னால், வேறு மொழி எதையும் படிக்காதே என்று அர்த்தமல்ல ஒவ்வொருவரின் தேவைக்கும் திறமைக்கும் தகுந்தபடி எத்தனை மொழிகளை வேண்டுமானாலும்படிக்கலாம் ஆனால், நீங்கள் எந்த மொழியைச் சரியாகப் படிப்பதற்கும் முதல் மொழி ஒன்று அவசியம் அந்த முதல் மொழி தாய் மொழியாகத்தான் இருக்க முடியும்
பாரதிதாசன் புதுவையில் ஆசிரியராக இருந்தபோது 'அ எழுத்தை சொல்லித் தர 'அணில் படம் வரைந்திருப்பதைக் கண்டித்து பிரெஞ்சு அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். 'குழந்தையின்வாழ்க்கை அம்மாவில் இருந்து தொடங்க வேண்டுமே தவிர, அணிலில் இருந்து தொடங்கக்கூடாது என்று அவர் சொன்ன கருத்தை பிரெஞ்சு அரசாங்கம் ஏற்றுக்கொண்டு பாடப்புத்தகத்தில் மாற்றம் செய்தது. ஆனால இன்றோ, நம் பிள்ளைகளின் வாழ்க்கையை 'ஆப்பிள் முதல் தொடங்குகிறார்கள.; அந்நிய உலகத்தைத் தெரிந்துகொள்வது நல்லதே ஆனால், தாய் மொழியைத் தவிர்ப்பதால், நாம் நம் வாழ்க்கைக்கே அந்நியமாகப்போவதை எப்போது புரிந்துகொள்ளப் போகிறோம்?
உலகமே கிராமமாகிவிட்ட பிறகு 'தமிழ,; தமிழ் என்று ஏன் கூப்பாடு போடுகிறீர்கள் என்று எங்கள் மீது கோபம் வரலாம் உலகம் கிராமமாகவில்லை. உலகம் அமெரிக்காவாகி வருகிறது! அவர்கள் அங்கே விழித்திருக்கும்போது, அவர்களுக்காக இங்கே நம் கணிப்பொறிப்பிள்ளைகள் உறங்காமல் வேலை பார்க்கிறார்கள் எஜமானர்கள் தூங்கும்போது அடிமைகள் எப்படிஉறங்க முடியும்?
மாமாவுக்கும் சித்தப்பாவுக்கும் நம்மிடம் தனித்தனி உறவுப் பெயர்கள் உண்டு. அந்த உறவுகள் இல்லாத, கூட்டுக் குடும்ப வாழ்க்கையற்ற ஒரு மொழியில் இரண்டு வௌ;வேறு உறவுகளை'அங்கிள் என்று அழைப்பதை நாமும் பயன்படுத்துவது மூடத்தனம்தானே?
மொழி கடந்து மனிதன் சிந்திக்க வேண்டும் என்பவர்களுக்கும் ஒரு செய்தி. நீங்கள் சொல்வதும் நியாயம்தான் இந்தியாவும், பாகிஸ்தானும் பிரியும்போது ஒரு லட்சம் இந்துக்கள், ஒரு லட்சம் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள் என்று பாடம் நடத்துவதைவிட, 'மொத்தமாக இரண்டு லட்சம் மனிதர்கள் கொல்லப்பட்டார்கள் என்றுசொல்வது தான் மனிதநேயம். இந்தியாவின் பிரிவு, மதத்தால் வந்ததாகச் சொல்லலாம் ஆனால், பாகிஸ்தானும், வங்காள தேசமும் ஏன் பிரிந்தன?
இரண்டு நாட்டிலும் ஒரே மதம்தான் ஆனாலும், 'எங்கள் வங்காள மொழியின் செழுமையை எங்களால் இழக்க முடியாது என்று மதம் கடந்து மொழி நின்றதுதான் வரலாறு! ஆம், மனிதனையும் மொழியையும் பிரிக்க முடியாது நண்பர்களே!
'பணம் சேர் என்று கட்டளையிடாமல், 'திறமைக்கும், தகுதிக்கும் உரிய பணம் சம்பாதிக்க வேண்டும் 'தீதின்றி ஈட்டல் பொருள் என அந்தப் பணம் முறையற்ற வழியில் வரக் கூடாது என்று போதிப்பதும் மொழியின் வேலை அப்போதுதான் மனிதம் தழைக்கும்!
இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவு மொழி விழிப்பு உணர்வு தமிழகத்தில்தான் தொடங்கியது இன்று இந்தியாவிலேயே மொழி அறியாமை உள்ளவர்களும்தமிழர்களாகத்தான் இருக்க முடியும.; தமிழகத்திடம் இருந்து மொழி உணர்வைப் பெற்றன பக்கத்து மாநிலங்கள.; இன்று, கன்னடம் தெரியாமல் யாரும் கர்நாடகாவில் படிக்க முடியாது,மலையாளத்தை உயிருக்கு இணையாகக் கருதுகிறார்கள். மலையாளிகள் சுந்தரத் தெலுங்குதான் ஆந்திராவின் வீடுகளில் இன்றைக்கும் ஒலிக்கிறது. ஆனால், தமிழகத்தின் தமிழ்த்தெருவில் மட்டும் தமிழ் இல்லை
'தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்பதை என்று நாம், நம் குழந்தைகளை வெறும் மதிப்பெண்களுக்காக இந்தப் பாடல்களை மனப்பாடம் செய்யவைத்தோமோ, அன்று தொடங்கியது நம் வீழ்ச்சி!
முனுசாமிக்கும், கண்ணம்மாவுக்கும் பிறந்த குழந்தை பள்ளியில் தமிழில் பேசியதற்காக தண்டனை விதிக்கிறார்கள் 'அம்மா என்று மகன் அழைத்தால் அகம் மகிழாமல், 'இவ்வளவோ செலவு பண்ணி 'அம்மான்னு கூப்பிடவா உன்னை இங்கிலீஷ் மீடியம் சேர்த்தேன் 'மம்மீன்னு கூப்பிடு மகனே! என்று பிள்ளையை அடிக்கிறாள் தமிழ்த் தாய்!
ஆம், தமிழர்களின் பிள்ளைகள் ஆங்கில வழிக் கல்வி பயில்கிறார்கள் தமிழ் தெரியாத ஒரு தலைமுறை தமிழ்நாட்டிலேயே உருவாகி வருகிறது.
மருத்துவம் ஆங்கிலத்தில் இருந்தாலும் நோயாளிகள் தமிழர்களாகத்தானே வருகிறார்கள். நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருக்கலாம் ஆனால், குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றம் வருபவர்கள் தமிழர்களாக இருக்கும்போது, தமிழ்தானே அங்கே தேவை.
'உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணா! என்று கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. தமிழர்கள் ஆங்கிலம் படிக்க விரும்பி, அதுவும் தெரியாமல், தமிழையும் சேர்த்துத் தொலைக்கிறார்கள.; தாய்மொழியைச் சரிவரக் கற்காத எந்த மனிதனும், வேறு மொழிகளை ஆழமாகக் கற்க இயலாது என்பது, அறிவியல் 'வல்லமை உள்ள மொழி வாழாதா? அதை ஏன் நாம் காப்பாற்ற வேண்டும் என்று சிறுபிள்ளைத்தனமாகக் கேட்கிறார்கள். மொழி வாழ்ந்தால்தான் அந்தச் சமூகம் வாழும், பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் மிகச் சிறிய அளவே உள்ள இங்கிலாந்து வல்லரசாக இருப்பதற்கு, அவர்கள் மொழி உலகம் முழுவதும் பரவி இருப்பதுதான் காரணம்!
தொழிலறிவு பெற தாய் மொழிக் கல்விதான் சிறந்த வழி என்பதற்கு ஜப்பான் நாடு கண்ணுக்கு முன்னால் இருக்கும் ஓர் உதாரணம். விதவிதமான கண்டுபிடிப்புகள், ரோபோக்களைத்தாண்டியும் ஜப்பானியர்களிடம் கவிதையும் மொழியும் அதனோடு பிணைந்த வாழ்க்கையும் முக்கியமாக இருக்கிறது. வல்லரசுகளை மிரட்டுகிற தொழில்நுட்பம் இருக்கிற சீனாவில் பெருமையே அதன் தாய் மொழிப் பற்றுதான.; போரினால் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்துபோனதமிழர்கள்தான் ஈழ விடுதலையில் முன்னெப்போதும் இல்லாத அளவு ஈடுபாடு காட்டுகிறார்கள்
ஜெர்மன் மொழியை இலக்கணச் சுத்தமாகப் பேசினாலும், 'நீ ஜெர்மானியன் இல்லையே என்று புறக்கணிக்கப்படுவதன் துயரத்தை உணர்ந்தால்தான் முடியும் ஆனால், இங்கேயோ தலைகீழ்தமிழில் படிக்கிற பிள்ளைகளுக்கு வேலையில் முன்னுரிமை இல்லாமல் போவது தமிழகத்தின் அவலம்
நம் குடும்ப உறவுகளில் சிக்கல் பெருகியதற்கும் நாம் தாய் மொழியை மறந்ததற்கும் இறுக்கமான தொடர்பு உண்டு. நாம,; நம் அறிவுச் செல்வத்தை இழந்து கொண்டு இருக்கிறோம் என்கிற உணர்வு நமக்கு எப்போது வரும்? 'கர்ணனுக்குப் பிறகு கொடையும் இல்லை, கார்த்திகைக்குப் பிறகு மழையும் இல்லை என்று ஒரு சமூகம் பழமொழி சொல்வது எளிதன்று எம் முன்னோர் எத்தனை கார்த்திகைகளுக்குக் காத்திருந்து, அனுபவத்தால் உணர்ந்து இந்தப்பழமொழியை உருவாக்கி இருக்க வேண்டும்? ஆனால், சுட்டெரிக்கும் வெயில் பகுதியில் வாழும் என் பிள்ளைகள் 'ரெயின் ரெயின் கோ அவே என்று பாடுவது அறிவுடைமை ஆகாதே!

எம் வருத்தம் பிள்ளைகளின் மேல் இல்லை அதைச் சொல்லித்தருகிற கல்வி முறைக்கே வெட்கம் இல்லை அடுத்த தலைமுறை பற்றி அக்கறை இல்லாத அரசியல் தலைவர்கள் வாய்ப்பது சமூகத்துக்கு நன்மையாகாது வீடு, தமிழை விட்டு விட்டது அரசியல், தமிழை விற்றுவிட்டது இது உடனடியாகத் திருத்தப்பட்டு அடையாளம் நிலை நிறுத்தப்பட வேண்டும் ஏனெனில் அடையாளமின்றி யாரும் வாழ இயலாது
நாம் எந்த மொழியின் மூலம் உலகத்தைத் தெரிந்துகொள்கிறோமோ அதுவே நம் அடையாளம் இதை நமக்குச் சொல்வதும் நம் முன்னோர்தான். தன் பெயர், இனம், மதம், நாடு எதையும் தன் இலக்கியத்தில் சொல்லாத திருவள்ளுவர், தன் முதல் குறளிலேயே.. முதல் சொல்லிலேயே தன்னைத் தமிழர் என்று சொல்லிக்கொள்கிறார். இறைவனுக்கு இணையாக மொழியைக் கருதியவர் திருவள்ளுவர்
'அகர முதல எழுத் தெல்லாம் என்று தன் மொழியின் அடையாளத்தோடு ஒப்பற்ற இலக்கியத்தைப் படைத்திருக்கிறார் திருக்குறளைப் புறக்கணிக்கிற சமூகம், வளர்ச்சிக்குரியசமூகமாகாது.
மொழிதான் நம் அடையாளம் மொழிதான் நமக்கு விழி தன் விரல் கொண்டு தன் விழியைக்குத்திக்கொள்கிற சமூகத்தை யார் தான் காப்பாற்ற முடியும்?
தமிழர் ஒன்றுபடு!தமிழால் ஒன்றுபடு!
சுப.வீரபாண்டியன் - ஆனந்த விகடன்

30.3.06

வழிபாட்டு தலங்கள்

சிங்களவரின் கண்மூடித்தனமான தாக்குதலில் பல கோயில்களும் தரைமட்டமாகிவிட்டன. சில இந்து கோயில்கள் பௌத்த கோயில்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. கோயில்களே தஞ்சம் என்று மக்கள் போர்காலத்தில் அடைக்கலம் புகுந்த பல கோயில்களும் தாக்கப்பட்டன. உதாரணமாக இலங்கையில் எல்லா மதத்தினரும், இனத்தவரும் புனித இடமாக கருதும் மருதமடு மாதா திருத்தலம் 1999ம் ஆண்டு போரின் உக்கிரத்தால் கோயிலில் தஞ்சமடைந்த 3000 மக்களைக் கேடயமாகக் கொண்டு திடீர் ஆக்கிரமிப்பு செய்த சிங்கள இராணுவம் மடுத்திருத்தலத்தைப் போர்முனையாக்கியதின் விளைவாக செல் தாக்கி 42 பேர், அப்பாவி மக்கள் இறந்தனர். அதில் பெரும்பாலோர் சிறு குழந்தைகள்.

1995ம் ஆண்டு ஜீலை மாதம் 9ம் தேதி யாழ்ப்பாண தீபகற்பத்தில் நவாலி தூய பேதுரு ஆலயத்தில் புக்காரா குண்டுவீச்சு விமானங்கள் தாக்கி 141 பேர் கொல்லப்பட்டனர். குருநகர் தூய ஜேம்ஸ் ஆலயத்தில் ஏழுபேர் கொல்லப்பட்டனர். 1992ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி முல்லைத்தீவு வற்றாபளை கண்ணகி அம்மன் கோயில் மீது நடந்த எறிகணைத் தாக்குதலில் 15 பேர் இறந்தனர். பரந்தன் முருகன் கோயில் கிணற்றிலிருந்து அபாயகரமான வெடிமருந்துகளும், ஆர்.பி.ஜி எறிகணைகளும் மீட்கப்பட்டன. இன்னும் பல கோயில்கள் இன அழிப்பின் சாட்சியாக உருக்குலைந்து காணப்படுகின்றன. இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள தமிழர் பகுதிகளிலுள்ள இந்து கோயில்கள் சில பௌத்த கோயிலாக, இராணுவத்தினர் வழிபடும் இடமாக மாற்றபட்டுள்ளன. ஓமந்தை, மன்னார் ரோடு போன்ற இடங்களிலும் யாழ்ப்பாணம் செல்லும் வீதிகளிலும் சில கோயில்கள் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டு பயன்பட்டு வருவதும் கண்கூடு. சனவரி மாதம் நான் தங்கியிருந்த முல்லைத்தீவு தூய பேதுரு ஆலயமும் 1995ம் ஆண்டு இராணுவ முகாமாக இருந்தது. கோயில் சுவர்களிலும், கதவுகளிலும் இராணுவ பெயர்களும், சிங்கள வார்த்தைகளும் எழுதப்பட்டுள்ளன. குண்டடிபட்டு கோயிலின் பிராதான வாயிற்கதவு சல்லடைபோல் துளைக்கப்பட்டுள்ளதும் இன்றைய வரலாற்று சின்னங்கள்.